நாளை ராகு கேது பெயர்ச்சி விழா மாகாளேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மேற்கு ராஜகோபுரத்தின் பின்புறம், பழமையான மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராகு, கேது நவக்கிரஹ பரிகார ஸ்தலமான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள மாகாளேஸ்வரரை, காளஹஸ்தியில் வசித்து வந்த, மாகாளன் என்ற பாம்பரசன், சிவபெருமான் இட்ட சாபத்தை போக்கிக்கொள்ள, சாப விமோசனத்திற்காக தரிசித்து விமோசனம் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில், ராகு, கேது, சிவபெருமானுடன் உள்ள திருக்கோல காட்சி அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒன்பது நவக்கிரஹங்களுக்கும் தனித்தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தம்பதி சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.இக்கோவிலில், ராகு, கேது பகவானுக்கு தனித்தனி சன்னிதி, அமைந்துள்ளதால், ராகு, கேது பெயர்ச்சியின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிரகதோஷ பரிகார நிவர்த்திக்காக வந்து, வழிபட்டு செல்கின்றனர்.நாளை மாலை, 4.20 மணியளவில், ராகு பகவான், மீன ராசியில் இருந்து, கும்ப ராசிக்கும், கேது பகவான், கன்னி ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர்.இதையொட்டி, கிரக தோஷ நிவர்த்திக்காக, அன்று காலை முதல், சிறப்பு பரிகார ஹோமங்களும், லட்சார்ச்சனையும் நடக்கிறது.விழா ஏற்பாட்டை செயல் அலுவலர் கேசவன், தக்கார் உதவி ஆணையர் கார்த்திகேயன், ஆய்வர் அலமேலு, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.