மழையால் சேதமான சாலை சீரமைப்பு பணி துவக்கம்
உத்திரமேரூர், வடகிழக்கு பருவ மழைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டும், மண் அரிப்பால் தார் பெயர்ந்து சாலைகள் சேதமாகியுள்ளன. சேதமான சாலைகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக,உத்திரமேரூர் - மானாம்பதி மற்றும் உத்திரமேரூர் -புக்கத்துறை, உத்திர மேரூர் - காஞ்சிபுரம் ஆகிய தடத்திலான சாலைகளில் சீரமைப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. இது குறித்து, உத்திரமேரூர் உதவி கோட்ட நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் அனந்த கல்யாண ராமன் கூறியதாவது:பருவ மழைக்கு சேதமான சாலைகள் உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் சேதமான நெடுஞ்சாலைகளில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.பழுதான சாலைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அப்பகுதிகளிலும் உடனடியாக சீரமைப்பு பணி துவக்கப்படும். இவ்வாறு அவர்கூறினார்.