நெல் கொள்முதல் நிலையத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்
உத்திரமேரூர்:வேடபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சி, வேடபாளையம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இப்பகுதி விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை, 20 நாட்களாக விற்பனைக்காக குவியலாக சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தினர், வேடபாளையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணியை இன்னமும் துவக்காமல் உள்ளனர். இந்நிலையில், உத்திரமேரூரில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் குவியல்களை சுற்றிலும் மழைநீர் தேங்கி குளம்போல் உள்ளது. இங்கு, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் வட்டாரத்தில் 42 நெல் கொள்முதல் நிலையங்கள், இந்த மாத இறுதிக்குள் திறக்கப்பட உள்ளன' என்றார்.