டெண்டர் உத்தரவாத தொகை குறைப்பால் ராஜாஜி மார்க்கெட்டில் 26ல் மீண்டும் ஏலம்
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்களில், போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது. இதனால், புதிய மார்க்கெட் கட்டடம் கட்டித்தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனால், புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டுமான பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7 கோடி ரூபாய் மதிப்பில், 2022ல் துவங்கப்பட்டன. கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் பின், கடந்த ஆகஸ்ட் மாதம், முதல்வர் ஸ்டாலின், ராஜாஜி மார்க்கெட்டை திறந்து வைத்தார். மார்ககெட்டில், கான்கிரீட் தளம் கொண்ட கடைகள், தரை கடைகள், கிடங்கு என, 258 கடைகள் கட்டப்பட்டுள்ளன.மார்க்கெட் திறந்த பின், அடுத்த ஓரிரு மாதங்களில் வாடகை, டெண்டர் போன்ற பணிகள் முடிந்து, புதிய மார்க்கெட்டில் வியாபாரத்தை துவங்குவோம் என, வியாபாரிகள் பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவர் கட்டும் பணிகள், டெண்டர் போன்றவை காரணமாக இன்று வரை, புதிய மார்க்கெட்டில் வியாபாரத்தை துவங்க முடியாமல் உள்ளது.புதிய மார்க்கெட்டுக்கான டெண்டர் விடும் பணிகள் தற்போது நடைபெறும் நிலையில், டெண்டர் தொகையாக மாநகராட்சி நிர்வாகம் 50 லட்ச ரூபாயும், ஒரு கோடி ரூபாய் உத்தரவாத தொகையாக செலுத்த வேண்டும் என, தெரிவித்திருந்தது. ஆனால், ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், உத்தரவாத தொகை அதிகமாக இருப்பதாக ஆட்சேபனை தெரிவித்து வந்தனர்.இதனால், கடந்த மாதம் நடந்த மார்க்கெட் ஏலத்தில் யாரும் பங்கேற்காததால், டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், வரும் 26ம் தேதி மார்க்கெட் டெண்டர் நடைபெறுவதாக, ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:மார்க்கெட் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், வரும் 26ம் தேதி டெண்டர் நடக்க உள்ளது. டெண்டர் தொகையாக 50 லட்ச ரூபாயும், உத்தரவாத தொகையாக ஒரு கோடி ரூபாயும் விதிக்கப்பட்டது.உத்தரவாத தொகை அதிகமாக இருப்பதாக, நாங்கள் கலெக்டரிடம் மனு அளித்தோம். அதைத் தொடர்ந்து, 50 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.உத்தரவாத தொகை அதிகமாக இருப்பதால், நாங்கள் கடந்த முறை ஏலத்தில் பங்கேற்கவில்லை. வரும் 26ம் தேதி, டெண்டர் நடைபெறுவதாக எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இம்முறை டெண்டரில் பங்கேற்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.