ரியல் எஸ்டேட் தொழிலால் வீட்டு மனை விற்பனை... அதிகரிப்பு! வேளாண் பரப்பு குறைவால் விவசாயிகள் கவலை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலின் அசுர வளர்ச்சியால், 10 ஆண்டுகளில் வீட்டு மனைகளின் சந்தை மதிப்பு விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 1.40 லட்சம் ஏக்கர் என இலக்கு வைத்துள்ள வேளாண் துறை, விவசாய பரப்பை அதிகரிக்க முடியாத நிலை தொடர்கிறது.சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. 40 ஆண்டுகளாக தொழிற்சாலை பெருக்கம், சாலை, பாலம், அரசின் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், ரயில் சேவை என, பல வகையில் மேம்பட்டு வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெளியூர்களைச் சேர்ந்தோர் புதிதாக மனை வாங்கி, வீடு கட்டி இங்கேயே தங்கி வருகின்றனர்.அவர்களின் வருகையால், மனை பிரிவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால், வேளாண் தொழில் பரப்பு, பெரிய எண்ணிக்கையில் அதிகரிக்கவில்லை.மாவட்டத்தில் நவரை, சம்பா, சொர்ணவாரி என, மூன்று பட்டங்களிலும் சேர்த்து ஆண்டுக்கு 1.40 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யும் பணியை வேளாண் துறை மேற்கொண்டு வருகிறது; நெல், கரும்பு, வாழை என விவசாயிகளை பயிரிட வைக்கிறது.இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சற்று கூடவும், குறையவும் இருக்கிறதே தவிர, பெரிய அளவில் வேளாண் பரப்பு அதிகமாகவில்லை.தடுப்பணை, அணைக்கட்டு என கோடிக்கணக்கான திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வாங்குவதால், விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் நெல் பயிரிடுகின்றனர்.மத்திய, மாநில அரசு திட்டங்கள் வாயிலாக பலரையும் வேளாண் திட்டத்தில், வேளாண் அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனர். இருப்பினும், விளை நிலங்கள் தரிசாக மாறி, நாளடைவில் வீட்டு மனைகளாக வகைப்பாடு செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.அந்த வகையில், மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், மாங்காடு, வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், வேகமாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.கடந்த 10 ஆண்டுகளில், 2,000 ஏக்கருக்கும் மேலாக நஞ்சை நிலங்கள் தரிசாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீட்டு மனைக்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.அவ்வாறு மாற்றப்பட்ட நிலங்கள் வாயிலாக, ரியல் எஸ்டேட் தொழில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகமாகிவிட்டது.பரந்துாரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையமும் வர இருப்பதால், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார்தாலுகாக்களில் நிலங்களின் மதிப்பு 10 - 40 லட்சம் ரூபாய் வரை, சந்தை மதிப்பில் விற்கப்படுகின்றன. 10 ஆண்டுகளில் சந்தை மதிப்பில் வீட்டு மனைகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.உத்திரமேரூர் தாலுகாவில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி பெறாத நிலையில், திருப்புலிவனம் அருகே புதிதாக 'சிப்காட்' வர இருப்பதால், அதை சுற்றிலும் நிலங்களின் மதிப்பு இப்போதே உயர துவங்கிவிட்டது.ரியல் எஸ்டேட் தொழிலின் வேகத்தால், நெல் பயிரிடும் பரப்பளவு அடுத்த ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், பரப்பளவு வேகமாக குறையும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.நஞ்சை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது என அரசாணையே உள்ளது. ஆனால், தரிசாக இருப்பதாக கூறி அனுமதி பெறுகின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது. விளை நிலங்களின் பெரும்பகுதி குறைந்துவிட்டது. நஞ்சை நிலங்கள் மத்தியில் ஒருவருக்கு வீட்டு மனைக்கு அனுமதி அளித்தால், சுற்றியுள்ள விளை நிலங்களுக்கு வழி விடுவதில் பல சிக்கல் ஏற்படுகிறது. இதனால், அவர்களும் நிலங்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.- கே.நேரு,மாவட்ட செயலர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காஞ்சிபுரம்.
மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளின் உத்தேச விலை பட்டியல் - 1,200 சதுரடி
குன்றத்துார் சுற்றிய பகுதி ரூ.40 லட்சம் முதல், ரூ.1 கோடி வரைஸ்ரீபெரும்புதுார் சுற்றிய பகுதி ரூ.15 லட்சம் முதல், ரூ.60 லட்சம் வரைவாலாஜாபாத் சுற்றிய பகுதி ரூ.10 லட்சம் முதல், ரூ.40 லட்சம் வரைகாஞ்சிபுரம் நகரம் ரூ.40 லட்சம் முதல், ரூ.1 கோடி வரைகாஞ்சிபுரம் சுற்றிய பகுதி ரூ.10 லட்சம் முதல், ரூ.35 லட்சம் வரைஉத்திரமேரூர் சுற்றிய பகுதி ரூ.7 லட்சம் முதல், ரூ.25 லட்சம் வரை