செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் அகற்றப்படும்: எஸ்.பி.,
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், மேட்டுத் தெரு, நெல்லுக்காரத் தெரு, ராஜாஜி மார்க்கெட் அருகில், செங்கழுநீரோடை வீதி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன.இதில், நெல்லுக்காரத் தெருவில் சித்ரகுப்தர் கோவில் அருகிலும், மேட்டுத் தெருவிலும் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லையாக இருந்தன.இதனால், இக்கடைகள் கடந்தாண்டு மூடப்பட்டன. இதையடுத்து, ராஜாஜி மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டதால், அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடைகளும் சமீபத்தில் மூடப்பட்டன.தற்போது, செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடை, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. மேலும், சட்டம் - ஒழுங்கிற்கும் பிரச்னையாக உள்ளது.எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்ற அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், 'செங்கழுநீரோடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற, கலெக்டர், டாஸ்மாக் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, எஸ்.பி., சண்முகம் தெரிவித்து உள்ளார்.மேலும், 'அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றினாலே, பெரும்பாலான போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்' என்றார்.