உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆசிரியர் இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர் மறியல்

ஆசிரியர் இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர் மறியல்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் பேரூராட்சி, குப்பையநல்லூர், மேட்டுக்காலனியைச் சேர்ந்தவர் செந்தில், 40; தனியார் பள்ளி ஆசிரியர். இவருக்கு மனைவி மற்றும் 8, 6 வயதுடைய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி இரவு, உத்திரமேரூர் அடுத்த நீரடி பகுதியில் உள்ள நண்பர் பாலாஜி என்பவரது வீட்டுக்கு சென்ற செந்தில், மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் மது அருந்தியதாக தெரிகிறது. அதன்பின், நண்பர்கள் அனைவரும் மொட்டை மாடியிலேயே தூங்கியதாகவும், நள்ளிரவில் மாடியில் இருந்து, செந்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.தகவல் அறிந்து வந்த உத்திரமேரூர் போலீசார், செந்தில் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ஆசிரியர் செந்தில் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், அவர் கொலை செய்து மாடியில் இருந்து கீழே வீசப்பட்டிருக்கலாம் எனவும், அவரது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, உத்திரமேரூர்- - எண்டத்தூர் சாலையில், மேட்டூர் அருகே அவரது உறவினர்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.உத்திரமேரூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, இதுகுறித்து, முறையாக விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ