செவிலிமேடு உயர்மட்ட பாலத்தில் இடையூறாக இருந்த மணல் அகற்றம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு - புஞ்சையரசந்தாங்கல் இடையே பாலாற்றின் குறுக்கே உள்ள பாலாறு உயர்மட்ட பாலத்தின் வழியாக பெருநகர், மானாம்பதி, உத்திரமேரூர், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், இப்பாலத்தின் வழியாக லாரி வாயிலாக எம்.சாண்ட் மணல் எடுத்துச் சென்ற லாரிகளில் இருந்து சிதறிய எம்.சாண்ட் மணல், இப்பாலத்தின் சாலையோரம் குவியலாக இருந்தது.இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மணல் குவியலில் சிக்கி விபத்தில் சிக்கினர். எனவே, செவிலிமேடு பாலாறு மேம்பால சாலையோரம் குவிந்துள்ள எம்.சாண்ட் மணலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், செவிலிமேடு பாலாறு உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் குவிந்திருந்த எம்.சாண்ட் மணல் குவியல் அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றனர்.