உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செவிலிமேடு பாலத்தில் சீரமைப்பு பணி

செவிலிமேடு பாலத்தில் சீரமைப்பு பணி

செவிலிமேடு:காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில், குழி ஏற்பட்ட பகுதியில், இரும்பு கம்பி அமைத்து, சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடிற்கும், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே, 25 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் வழியாக சுற்றுவட்டார பகுதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பாலத்தின் மீது போடப்பட்டுள்ள சாலையின் இணைப்பு பகுதியில் ஆங்காங்கே, இரும்பு கம்பிகள் உடைந்ததால், சாலை சேதமடைந்து பெரிய அளவில் குழி ஏற்பட்டு இருந்தது. இதனால், மின்விளக்கு வசதி இல்லாத இப்பாலத்தில், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழி ஏற்பட்டுள்ள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். இதனால், செவிலிமேடு பாலத்தில் ஏற்பட்ட குழியை முறையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை காஞ்சிபுரம் உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், செவிலிமேடு பாலாறு பாலத்தில் குழி ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நேற்று துவங்கியது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செவிலிமேடு பாலாறு பாலத்தில் குழி ஏற்பட்ட பகுதியில் சேதமான பழைய இரும்பு கம்பியை அகற்றிவிட்டு, புதிதாக கம்பி பொருத்தும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து தார் கலவை வாயிலாக சாலை சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை