பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
அய்யங்கார்குளம்:அய்யங்கார்குளம் ஊராட்சியில், ஆக்கிரமிப்பு காரணமாக பாதியில் விடப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி, கீழாண்ட தெரு மற்றும் நடுத்தெரு, கங்கையம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், கீழாண்டை தெருவிற்கும், நடுத்தெருவிற்கும் இடையே 1-00 மீட்டர் நீளத்திற்கு, கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்தது. சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக, கால்வாய் கட்டுமானப் பணி, பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால், பருவ மழைக்காலத்தில், குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழும் நிலை உள்ளது. இதனால், வடிகால்வாய் அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாய் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அய்யங்கார்குளம் ஊராட்சியில், கால்வாய் கட்டுமானப் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.