பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் பஸ்சை வாலாஜாபாத் வரை நீட்டிக்க கோரிக்கை
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் ஒன்றிய அலுவலகம், வங்கிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், காவல் நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.மேலும், வாலாஜாபாத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், வாலாஜாபாத் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை, மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரத்திற்கு மாநகர பேருந்தும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. எனினும், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே போதுமான பேருந்து வசதி ஏற்படுத்தபடாமல் உள்ளது.இதனால், சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் சுற்றி உள்ள கம்பெனிகளில் பணிக்கு செல்வோர், உரிய நேரத்தில் குறித்த இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர்.இவர்கள், வாலாஜாபாத்தில் இருந்து, ஒரகடம் வரை ஒரு பேருந்தில் சென்று, ஒரகடத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் வரை மற்றொரு பேருந்துமாக மாறி, மாறி செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால், நேரம் விரயம் மற்றும் அலைச்சலுக்குள்ளாகின்றனர்.எனவே, பூந்தமல்லியில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் வழியாக, சுங்குவார்சத்திரம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்தை வாலாஜாபாத் வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, வாலாஜாபாத் சுற்றி உள்ள பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.