உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநகராட்சியில் இலவசமாக மனு எழுதி கொடுக்க கோரிக்கை

மாநகராட்சியில் இலவசமாக மனு எழுதி கொடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், மனு அளிக்க, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.வாரந்தோறும், 300 - 400 பேர் வரை மனு அளிக்க வருகின்றனர். அவ்வாறு வரும் எழுத, படிக்க தெரியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர், தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தர வேண்டியுள்ளது.அவ்வாறு மனு எழுத தெரியாதவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதி தருவோரிடம், 20 - 30 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னையை சரிசெய்ய, கலெக்டர் அலுவலகம் சார்பில், இலவசமாக மனு எழுதி தரும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.அதேபோல், மாநகராட்சியிலும் இலவசமாக மனு எழுதி தருவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரி சம்பந்தமாகவும், இறப்பு சான்றிதழ், புகார், கட்டட அனுமதி என, எந்த வகையான கோரிக்கையாக இருந்தாலும், மனு எழுதி தர வேண்டியுள்ளது.இதற்கு, மாநகராட்சி அலுவலக வாசலில் மனு எழுதி தருவோர், 50 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். தினமும் 20 பேருக்கு மேலாக பணம் கொடுத்து மனு எழுதி பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக முதியோர், எழுத, படிக்க தெரியாதவர்கள் என, பலரும் சிரமப்படுகின்றனர்.இலவசமாக மனு எழுதி தர ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோரை பயன்படுத்தி கொள்ளலாம். நகரவாசிகளுக்கு பலன் அளிக்கும் வகையில், இலவசமாக மனு எழுதி தரும் நடவடிக்கையை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளுமா என, நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ