புத்தகரத்தில் இடிந்த நிழற்குடை மீண்டும் கட்ட கோரிக்கை
வாலாஜாபாத்:புத்தகரம் பேருந்து நிறுத்தத்தில் இடிந்து விழுந்த பயணியர் நிழற்குடை கட்டடத்தை அகற்றி விட்டு, புதிதாக நிழற்குடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் தெருவில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பேருந்து நிறுத்த சாலையோரத்தில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், வாகன விபத்து காரணமாக புத்தகரம் சாலையோர பயணியர் நிழற்குடை முழுதுமாக இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கிய அக்கட்டடம் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர், நிழற்குடை கட்டப்படாததால், மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, புத்தகரம் பேருந்து நிறுத்தத்தில் இடிபாடுகளில் சிக்கிய பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.