சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் ஒட்டிஉள்ள, காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் ஒட்டிஉள்ள, காமாட்சியம்மன் சன்னிதி தெரு வழியாக, தந்தை பெரியார் நகர், முனிசிபல் குடியிருப்பு, வடக்கு கிருஷ்ணன் தெரு, தெற்கு கிருஷ்ணன் தெரு, பூக்கடை சத்திரம் உள் ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழை பெய்தால், பள்ளத்தில் மழைநீர் தேங்குகிறது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். நடந்து செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.