சோமங்கலம் வனப்பகுதி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுகோள்
குன்றத்துார்:குன்றத்துார் அருகே சோமங்கலம் - புதுப்பேடு சாலையானது, குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையையும், சோமங்கலம் - தாம்பரம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இந்த சாலையில், சோமங்கலம் அருகே மேலத்துார் முதல் சக்தி நகர் வரை வனப்பகுதி உள்ளது. ஒருவழிச் சாலையாக இருந்ததால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதையடுத்து, இந்த சாலையை, 5.10 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்து அகலப்படுத்த, நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர்.ஆனால், வனத்துறை அனுமதி கிடைக்காததால், புதுப்பேடு - சோமங்கலம் சாலையில், வனப்பகுதி உள்ள 2 கி.மீ., துாரம் மட்டும் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து, புதிய சாலை அமைக்கப்பட்டது. மற்ற இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:வனப்பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால், அந்த வழியே கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எதிரெதிரே வாகனங்கள் செல்லும் போது, லோடு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சாலையோரம் கவிழ்ந்து விபத்தும் ஏற்படுகிறது.எனவே, வனப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.