எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் ஒரகடம் சந்திப்பில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தின்கீழ், வண்டலுார் மார்க்கமாக இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் செல்ல எதிர் திசையில் செல்வதால், ஒரகடம் சந்திப்பில் விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்து உள்ளது.வண்டலுார் -- வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. பிரதான தொழிற்சாலை பகுதியாக விளங்கும் இங்கு, மேம்பாலத்தின் வழியாக வண்டலுார் -- வாலாஜாபாத் பகுதிகளுக்கு, மேம்பாலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் பகுதிகளுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்காக ஊழியர்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்ல, ஒரகடம் வழியே சென்று வருகின்றனர்.வண்டலுார் மார்க்கமாக இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் பகுதிக்கு செல்ல, மேம்பாலத்தின் கீழ் உள்ள பாதை வழியாக, சாலையை கடந்து சென்று வந்தன.இந்த நிலையில் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், இரு தினங்களுக்கு முன், மேம்பாலத்தின் தடுப்புகளை வைத்து, போலீசார் பாதையை அடைத்தனர்.இதனால், வண்டலுார் மார்க்கமாக இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் செல்ல, மேம்பாலத்தின் கீழ் எதிர் திசையில் படையெடுக்கின்றன.இதனால், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலாத்தின் கீழ் விபத்தில் சிக்கும் சூழல் அதிகரித்து உள்ளது.எனவே, எதிர் திசையில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, ஒரகடம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.