குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சீராக மூடாததால் விபத்து அபாயம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத், பி.கே., செட்டித் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சீராக மூடாததால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது . இத்தெருவின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால்வாயையொட்டி குடியிருப்புகளுக்கான குடிநீர் குழாய் புதைக்கப்ப ட்டுள்ளது. இந்நிலையில், புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய், கடந்த மாதம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வீணாகியது. இதையடுத்து, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. சீரமைப்பின்போது பள்ளம் முழுமையாக மூடப்படாமல் அரை, குறையாக பணி செய்துள்ள தால் சாலையோர அப்பகுதி சீர்கேடாக உள்ளது. இதனால், அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை கடந்து செல்ல இயலாமல் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில், பஜார் வீதியில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, வாலாஜாபாத், பி.கே., செட்டித் தெருவில் சரிவர மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.