ஒயரில் உரசும் மரங்களால் மின் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கிளாய் ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் --- திருவள்ளூர் சாலையில் இருந்து, கிளாய் சாலையோரம் மின்கம்பங்கள் வழியாக மின்வழித்தடம் செல்கிறது. இந்த தடத்தில் செல்லும் மின் ஒயர் மீது, சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து படர்ந்து காணப்படுகின்றன.இதனால், அப்பகுதியில் மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. சீமைக் கருவேல மரங்களின் பாரம் தாங்காமல், மின் ஒயர் அறுந்து சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இடையூறாக வளர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.