மத்திய அரசு மாஜி அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம், நகை திருடியோர் கைது
சென்னை: குரோம்பேட்டையில், மத்திய அரசு முன்னாள் அதிகாரி வீட்டின் மாடி கதவை உடைத்து, பணம், நகை, வெள்ளி பொருட்களை திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர். குரோம்பேட்டை, சோழவரம் நகரைச் சேர்ந்தவர் மணவாளன், 70; ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு, திருவான்மியூர், சீனிவாசபுரத்தில் ஒரு வீடும், பெங்களூருவில் மகள் வீடும் உள்ளது. கணவன் - மனைவி இருவரும், பெரும்பாலும் மகள் வீட்டிலேயே வசித்து வருகின்றனர். அவ்வப்போது, இங்கு வந்து செல்வதும் வழக்கம். கடைசியாக, ஜூலை மாதம் முதல் வாரத்தில், குரோம்பேட்டை வீட்டிற்கு வந்து, ஒரு நாள் தங்கிவிட்டு, மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், நவ., 2ம் தேதி வந்தபோது, முதல் மாடியின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ஆறு சவரன் நகை ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக, குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. தற்போது, இது தொடர்பாக, படப்பையை அடுத்த சிறுவாஞ்சேரி, குப்பைகளிமேடு பகுதியை சேர்ந்த சிவா என்ற சின்னசிவா, 35, ரஞ்சித்குமார், 25, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும், 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 50,000 ரூபாய், 6 சவரன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின், இருவரும் பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.