அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 187 பணிகளுக்கு அனுமதி தேர்தலுக்குள் முடிக்க ஊரக வளர்ச்சி துறை உத்தரவு
காஞ்சிபுரம்:அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 21.24 கோடி ரூபாய் மதிப்பில், 187 பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. இந்த வளர்ச்சி பணிகளை தேர்தலுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.தலா, ஒவ்வொரு ஊராட்சிக்கும், 30 லட்சம் ரூபாய் கிராம வளர்ச்சி நிதி, குக்கிராம வளர்ச்சி நிதி மற்றும் மக்கள் தொகை அடிப்படை நிதி என, மூன்று நிதிகள் சேர்த்து அண்ணா மறுலர்ச்சி திட்டம்- - 2, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்நிதி பெறுவதற்கு, ஆண்டுதோறும் தலா, 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சாலைகள் நெற்களங்கள், செடிகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியை, ஊரக வளர்ச்சி துறை செய்து கொடுக்கிறது.கடந்த, 2021 - 22ம் நிதி ஆண்டு, 55 ஊராட்சிகளுக்கு, 23.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; 2022 - 23ம் நிதி ஆண்டு, 55 ஊராட்சிகளுக்கு, 21.22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; 2023 - 24ம் நிதி ஆண்டு 55 ஊராட்சிகளுக்கு, 20.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; 2024 - 25ம் ஆண்டு 55 ஊராட்சிகளுக்கு, 20.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.நடப்பு 2025- - 26ம் நிதி ஆண்டிற்கு, 54 ஊராட்சிகளுக்கு, 21.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், ஊராட்சி அலுவலகம், சாலைகள், நெல் கதிரடிக்கும் நெற்களங்கள், தெரு விளக்குகள், அங்கன்வாடி மைய கட்டடங்கள், ரேஷன் கடை கட்டடங்கள் என, 187 விதமான பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த பணிகளுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நிர்வாக அனுமதி அளித்துள்ளார்.இந்த வளர்ச்சி பணிகளால், ஊராட்சிகளுக்கு தேவையான சாலை, புதிய கட்டடம் ஆகிய வசதிகள் கிடைக்கும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பாண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு, 54 ஊராட்சிகள் தேர்வாகியுள்ளது. இதற்கு, 21.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 187 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இந்த பணிகளுக்கு, ஊராட்சிகளில் முறையாக டெண்டர் விடப்பட்டு, தேர்தலுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.