குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுது ஓரிக்கையில் துாய்மை பணியில் சுணக்கம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குப்பை சேகரிப்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ள இரு பேட்டரி வாகனங்களும் பழுதடைந்து உள்ளதால், ஓரிக்கையில் துாய்மை பணி மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டுக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள தெருக்களில் சேகரமாகும் குப்பையை சேகரிப்பதற்காக, துாய்மை பணியாளர்களுக்கு பேட்டரியில் இயங்கக்கூடிய இரு வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பேட்டரி வாகனம் பழுதடைந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள துாய்மை பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தில் உள்ள பேட்டரியில் சார்ஜ் ஒரு மணி நேரம் மட்டும் நிற்பதால், துாய்மை பணியாளர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாததால், குப்பையுடன் வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால், 46வது வார்டு ஓரிக்கையில் உள்ள தெருக்களில், குப்பையை முழுமையாக சேகரிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக ஓரிக்கை பாலாறு பாலத்தை கடந்து செல்ல வேண்டிய வசந்தம் நகரில் குப்பை சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, காஞ்சிபுரம் 46வது வார்டு ஓரிக்கையில், பழுதடைந்த நிலையில் உள்ள குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் இரு வாகனங்களையும் பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.