விஷ ஜந்துக்களின் புகலிடமான சார் - பதிவாளர் அலுவலகம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. போதிய இடவசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், கடந்த 2021-ல், 1.72 கோடி ரூபாய் செலவில், புதிதாக சார் - பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வீடு, மனை, நிலம் வாங்க, விற்க மற்றும் பத்திரப்பதிவு செய்வதற்காக, வந்து செல்கின்றனர்.தற்போது, சார் - பதிவாளர் அலுவலக கட்டடத்தை சுற்றி, கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதிலிருந்து, அவ்வப்போது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அலுவலகத்திற்குள் வருகின்றன.இதனால், இங்கு வருவோர் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே, சார் - பதிவாளர் அலுவலக கட்டடத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.