வீட்டு வாசலை சூழ்ந்த கழிவுநீர் மளிகை தெருவில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், மளிகை தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.மேலும், பாதாள சாக்கடை வழியாக வெளியேற வேண்டிய கழிவுநீர், மாறாக வீட்டிற்குள் 'ரிட்டர்ன்' ஆவதால், வீட்டு வாசலில் குளம்போல கழிவுநீர் தேங்குகிறது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், முதியோர், குழந்தைகள், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பலர் குளிக்கவும், இயற்கை உபாதை கழிக்கவும், உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.துர்நாற்றம் வீசுவதால், வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. மாதக்கணக்கில் தேங்கும் கழிவுநீரால் இப்பகுதியில் வாந்தி, பேதி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் மருத்துவ முகாம் நடத்துவது, மாஸ் கிளீனிங் செய்வது என இல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மளிகை தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.