உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சி சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருவதால், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் காஞ்சியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள பஞ்சுகொட்டி தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு. 10 நாட்களாக, 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால், காமாட்சியம்மன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக, மூன்று மாதங்களாக கழிவுநீர் ஓடைபோல வெளியேறி குட்டைபோல தேங்கி உள்ளதால், அப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவில், ஒரு வாரத்திற்கும் மேலாக கழிவுநீர் வழிந்தோடுவதால் கடுவெளி சித்தர் கோவில், ரயில் நிலையம், ஏகாம்பரநாதர் கோவில், சிவகாஞ்சி போலீஸ் நிலையம் செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், ஆறு மாதங்களாக வெளியேறும் கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.காஞ்சிபுரம் பெருமாள் தெருவில், மீன் மார்க்கெட் எதிரில், 'மேன்ஹோல்' மற்றும் பொது கழிப்பறையில் இருந்து, இரு மாதங்களுக்கு மேலாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.இதனால், மீன் மார்க்கெட், புதிய ரயில் நிலையம், அம்மன் கோவிலுக்கு செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் மீன் மார்க்கெட் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !