| ADDED : டிச 04, 2025 04:29 AM
காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவிலை சுற்றி நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை வந்து செல்கின்றனர். பக்தர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லாததால், கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், பக்தர்கள் பல வகையில் தொல்லைக்கு ஆளாகின்றனர். ஏற்கனவே, திருநங்கையர் தொல்லை அதிகமாக உள்ள நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளால், அன்றாடம் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. நடக்க கூட இடமில்லாமல், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். நடைபாதை முழுதும் கடைகளான நிலையில், சாலையின் பெரும்பகுதியும் கடைகளாக மாறிவிட்டன. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தவும் முடியாமல், சிரமப்படுகின்றனர். கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேபோல, திருநங்கையர் பலரும், பக்தர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு அளிப்பதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.