நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிப்பு ஸ்ரீபெரும்புதுாரில் பாதசாரிகள் பரிதவிப்பு
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் முக்கிய சாலையாக உள்ள காந்தி சாலையில், வங்கி, உணவகம், மருத்துவமனை, பூக்கடை, சிறு குறு வணிக கடைகள் என, 150க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.இப்பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், 6.09 கோடி ரூபாய் மதிப்பில், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் முதல், ஜெயா மருத்துமனை வரை, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மழைநீர் வடிகால்வாய் மீது, பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில், சாலையோரம் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.சாலையோரம் உள்ள கடைகளில் மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள், நடைபாதையின் மீது அமைத்தும், மற்ற பொருட்களை நடைபாதையில் வைத்தும் உள்ளனர்.இதனால், பொதுமக்கள் நடைபாதையில் செல்ல வழியின்றி சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.எனவே, நடைபாதை நடப்பதற்கு என்பதை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.