30 ஆண்டாக உயர்த்தப்படாத பட்டு சேலை கழிவு தொகை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு அரசு வழங்கும், 200 ரூபாய் கழிவு தொகையை, உயர்த்தி வழங்கும்படி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் கைத்தறி துறையின் கீழ், 22 பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இந்தப் பட்டு சேலைகளை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தள்ளுபடியில் விற்பனை செய்வதால், சங்கங்கள் நஷ்டம் அடையக்கூடாது என்பதற்காக, 30 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு ஒரு பட்டு சேலைக்கு, 200 ரூபாய் கழிவு தொகை வழங்குவதாக அறிவித்தது. 'ரிபேட்' என, சொல்லப்படும் இந்த கழிவு தொகை, அதன்பின் உயர்த்தப்படவே இல்லை. இன்று வரை, 200 ரூபாய் மட்டுமே அரசு வழங்குகிறது. அப்போது இருந்ததை விட, தற்போது பட்டு சேலைகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆனாலும், கழிவு தொகையை உயர்த்தவே இல்லை என, நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கழிவு தொகையை, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தும், கைத்தறி துறை இதை பரிசீலனை செய்யவே இல்லை. காஞ்சிபுரத்திற்கு சமீபத்தில் வந்த துணை முதல்வர் உதயநிதியிடம், நெசவாளர்கள் கொடுத்த மனுவிலும், கழிவு தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிய உள்ள நிலையில், பட்டு சேலைக்கான கழிவு தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.