சிறு பாசன ஏரிகளை துார்வாருவதில் மெத்தனம் பருவ மழையின் போது தண்ணீரை சேகரிப்பதில் சிக்கல்
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய ஐந்து ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஐந்து ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில், 380 சிறு பாசன ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சேகரமாகும் மழை நீரை பயன்படுத்தி, 70,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு பாசன ஏரிகளின் கரையை பலப்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், கொள்ளளவை மீட்டெடுக்கவும் ஆண்டுதோறும் துார்வாருவது வழக்கம். இந்நிலையில், 2024 --- 25ம் நிதி ஆண்டின் பட்ஜெட் உரையில், 5,000 சிறு பாசன ஏரிகள், 500 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 380 சிறு பாசன ஏரிகளில், 24 ஏரிகள் என்.ஜி.ஓ., / சி.எஸ்.ஆர்., அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. நிதி ஒதுக்கீடு
அதை தொடர்ந்து, 289 ஏரிகளுக்கு கனிம வள நிதியின் கீழ் பணிகளை மேற்கொள்ள அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, மீதமுள்ள 67 ஏரிகளுக்கு சிறுபாசன ஏரிகள் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் கீழ், 4.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதில், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள மூன்று சிறு பாசன ஏரிகளுக்கு, 24 லட்சத்து, 66,000 ரூபாயும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 52 சிறுபாசன ஏரிகளுக்கு, 3 கோடியே 30 லட்சத்து, 23,000 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதேபோல, வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள 12 சிறு பாசன ஏரிகளுக்கு, 75 லட்சத்து, 4,000 ரூபாயும் என, மொத்தமாக 4 கோடியே, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 67 சிறு பாசன ஏரிகளை துார்வாரும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் துவக்கப்பட்டது. பணிகள் துவக்கப்பட்டு இரண்டு மாதமாகியும் இதுவரை 20 சிறு பாசன ஏரிகள் மட்டுமே துார்வாரப்பட்டுள்ளன.மீதமுள்ள 47 சிறு பாசன ஏரிகளில் இன்னும் துார்வாரும் பணிகள் துவங்காமல், ஊரக வளர்ச்சி துறையினர் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதனால், இரண்டு மாதங்களில் துவங்க உள்ள பருவமழையின் போது, போதிய அளவு மழை நீரை சேமிக்க முடியாமல், தண்ணீரானது வீணாக வெளியேற வாய்ப்பு உள்ளது. நடவடிக்கை
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:தற்போது, கோடை வெயிலால் சிறு பாசன ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளன. இதை பயன்படுத்தி, ஊரக வளர்ச்சி துறையினர் ஏரியின் கரைகளை பலப்படுத்தி, நீர் சேகரமாகும் இடத்தில் துார்ந்துள்ள மண் திட்டுகளை துார்வார வேண்டும்.தொடர்ந்து, சில ஆண்டுகளாக சிறு பாசன ஏரிகள் முறையாக பராமரிப்பு இல்லாததால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை ஏரிகளில் இருந்து பெற முடியாத நிலை உள்ளது. எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன், சிறு பாசன ஏரிகளை துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறு பாசன ஏரிகளை துார்வாரும் பணியானது கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. பணி துவங்கிய நாள் முதல் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.இதனால், ஏரிகளை துார்வாரும் பணியானது தொடர்ந்து தடைப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆண்டுக்கான பருவமழை இன்னும் இரண்டு மாதங்களில் துவங்க உள்ளதால், அதற்குள் சிறு பாசன ஏரிகளை துார்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.