உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விஜயதசமியை முன்னிட்டு இசைப்பள்ளியில் சிறப்பு சேர்க்கை

விஜயதசமியை முன்னிட்டு இசைப்பள்ளியில் சிறப்பு சேர்க்கை

காஞ்சிபுரம்:விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு கலை பண்பாட்டு துறையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு, மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 13 -- 25 வயது வரை இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டு பயிற்சி முடிவில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. விஜயதசமியை முன்னிட்டு, நடப்பாண்டுக்கான மாணவ - மாணவியர் சிறப்பு சேர்க்கை நடப்பதாக இசைப்பள்ளி தலைமையாசிரியர் ரமணி தெரிவித்துள்ளார். பயிற்சியில் சேரும் மாணவ -- மாணவியருக்கு, இலவச பேருந்து பயண சலுகை; சைக்கிள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில் மாணவ - மாணவியரின் கல்விக்கு ஏற்ப, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இசைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும், நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில் பணிபுரியவும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ