மண்டல பீச் வாலிபால் போட்டி: செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்
சென்னை, கல்வித்துறை நடத்திய மண்டல பீச் வாலிபால் போட்டியில், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டி கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், மண்டல பீச் வாலிபால் போட்டியில், 14, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.அதைத் தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்ட மாணவருக்கான மண்டல பீச் வாலிபால் போட்டி, நேற்று முன்தினம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது.முதல் அரை இறுதியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி மற்றும் சோழிங்கநல்லுார் பாரத் தாஸ் பள்ளி அணிகள் மோதின. அதில், 21 -- 14, 21 -- 16 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.மற்றொரு அரை இறுதியில் ஜேப்பியார் பள்ளி, 21 -- 11, 21 -- 16 என்ற கணக்கில், செயின்ட் மேரிஸ் பள்ளி அணியை தோற்கடித்தது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் மற்றும் ஜேப்பியார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.அதில், முதல் செட்டில், தோல்வி அடைந்த செயின்ட் பீட்ஸ் அணி, அடுத்தடுத்த செட்களில் சூடு பிடிக்க துவங்கியது.முடிவில், 14 -- 21, 21 -- 19, 15 -- 7 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ் பள்ளியை, அப் பள்ளியின் தலைமைஆசிரியர் இருதயராஜ் பாராட்டினார்.மண்டல பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி.