கழிவுநீருடன் மழைநீர் தேக்கம் மின்நகரில் சுகாதார சீர்கேடு
கோனேரிகுப்பம்:காஞ்சிபுரம் மின் நகரில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி, பாசி படர்ந்துள்ளதால், அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர், மஞ்சள்நீர் கால்வாய் வாயிலாக வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மஞ்சள் நீர் கால்வாயில் கட்டு மானப் பணி நடைபெறுவதால், கால்வாயில் கழிவுநீர் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, கழிவுநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியேறாமல் சாலையில் வழிந்தோடும் நிலை இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால், ராஜராஜன் தெருவில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து, நாள் கணக்கில் சாலையில் தேங்கிய நீர், பாசி படர்ந்து சகதிநீராக மாறியுள்ளது. மேலும், சகதிநீரில், உற்பத்தியாகும் கொசுக்களால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின் நகர், ராஜராஜன் தெருவில் தேங்கியுள்ள சகதிநீரை அகற்றவும், இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.