உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மிக்ஜாம் புயலால் நீர்மட்டம் 1.17 மீட்டர்... உயர்வு!:கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

மிக்ஜாம் புயலால் நீர்மட்டம் 1.17 மீட்டர்... உயர்வு!:கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

காஞ்சிபுரம்: 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பெருமழையால் டிசம்பர் மாதத்தில், நிலத்தடி நீர்மட்டம் 1.17 மீட்டர் உயர்ந்துள்ளது. இதனால், கோடையில் குடிநீர் பிரச்னை வராது என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள், வடகிழக்கு பருவமழையை நம்பியே உள்ளன. பருவமழை பொய்த்தால், வரும் ஆண்டில் கோடையை சமாளிப்பது கடினம்.கடந்தாண்டை பொறுத்தவரை, தென்மாவட்டங்களுக்கு அதிக மழை கொடுக்கும் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் இயல்பை விட அதிக மழை பொழிவை தந்தன.

நீர்நிலைகள் நிரம்பின

டிசம்பர் மாதம் 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.நீர்வள ஆதாரத்துறை மாதந்தோறும் எடுக்கும் கணக்கீட்டின்படி, காஞ்சிபுரத்தில் டிசம்பரில் மட்டும் 1.17 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை, 59.1 செ.மீ., மழை காஞ்சிபுரத்தில் பதிவாகியுள்ளது. இதில், நவம்பரில் 31.8 செ.மீ., டிசம்பரில் 28.4 செ.மீ. பதிவாகி உள்ளது.

மகிழ்ச்சி

இதன் எதிரொலியாக, ஜூலை மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.12 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், அடுத்த ஐந்து மாதங்களில், 2.39 மீட்டர் உயர்ந்து, 0.73 மீட்டராக பதிவாகியுள்ளது.செய்யாறு, பாலாறு, வேகவதிஆகிய ஆறுகளை ஒட்டியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், பாலாற்றை நம்பியுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சிக்கும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல், செம்பரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், சுங்குவார்சத்திரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் பகுதியிலும் கோடை காலத்தை சமாளிக்க கூடிய வகையில், நிலத்தடி நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இதனால், வரும் கோடையில் காஞ்சிபுரத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாத வாரியான நிலத்தடி நீர்மட்டம்

மாதங்கள் - 2023 நீர்மட்டம் (மீட்டரில்)ஜூலை 3.12ஆகஸ்ட் 2.74செப்டம்பர் 2.51அக்டோபர் -1.57நவம்பர் 1.90டிசம்பர் 0.73


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ