மழைநீர் கால்வாய் பணி அரைகுறை கீழம்பி அணுகு சாலையில் அச்சம்
காஞ்சிபுரம்: கீழம்பி அணுகுசாலை ஓரம், மழைநீர் கால்வாய் கட்டும் பணியை அரைகுறையாக விட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது. சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை செல்கிறது. இச்சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் காரப்பேட்டை முதல், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துார விரிவுபடுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், ஆரியபெரும்பாக்கம், திருப்புட்குழி, தாமல் ஆகிய பகுதிகளில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கீழம்பி, ஆரியபெரும்பாக்கம் ஆகிய மேம்பாலங்களை ஒட்டிச் செல்லும் அணுகுசாலையில், அதிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த அணுகு சாலை ஓரங்களில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் அரைகுறையாக விடப்பட்டிருப்பதால், கீழம்பி அணுகு சாலை ஓரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கீழம்பி மார்க்கமாக வந்தவாசி புறவழிச்சாலை செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, கீழம்பி அணுகு சாலை ஓரம் அரைகுறையாக விடப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.