| ADDED : டிச 05, 2025 06:24 AM
உத்திரமேரூர்: சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கென சொந்தமாக விளையாட்டு மைதானம் இல்லாததால், அருகில் காலியாக உள்ள தனியார் மற்றும் கோவில் மனையில் மாணவ - மாணவியர் விளையாடி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட சாலவாக் கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற் பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளிக்கென இதுவரை விளையாட்டு மைதானம் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. பள்ளிக்கு அருகாமையில் காலியாக உள்ள தனியார் மற்றும் கோவில் மனையை மாணவ - மாணவியர் விளையாட்டு மைதானமாக பயன் படுத்தி வருகின்றனர். இந்த காலி மனை திறந்தவெளியாக உள்ளதால், இரவு நேரங்களில், அப்பகுதி மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விளையாடும் இடத்தில் வீசி செல்கின்றனர். மாணவ - மாணவியர் உடைந்த பாட்டில் உள்ளிட்டவற்றால் காலில் காயம் ஏற்படுதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும், விளையாட்டு நேரங்களில் மாணவர்கள் சாலையை ஒட்டிய பகுதி வரை ஓடி விளையாடுகின்றனர். அங்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கென சொந்தமாக சுற்றுச்சுவருடன் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.