நடத்துனரை தாக்கிய மர்மநபரால் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பரபரப்பு
காஞ்சிபுரம்:பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி, வழக்கம்போல் நேற்று காலை 9:30 மணிக்கு, தடம் எண்: 578 என்ற அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தில் பள்ளி மாணவ - மாணவியர் பலரும் படியில் தொங்கியபடி பயணித்தனர்.அப்போது, படியில் நின்றிருந்த மாணவர்களை பேருந்து உள்ளே ஏறும்படி, நடத்துனர் நாராணயணசாமி எச்சரித்து வந்துள்ளார். பேருந்து இருங்காட்டுக்கோட்டை அருகே சென்றபோது, படியில் இருந்த மாணவரை உள்ளே செல்லுமாறு, நடத்துனர் நாராயணசாமி கண்டித்துள்ளார்.இதை பார்த்த மர்மநபர், நடத்துனரை கடுமையாக தாக்கினார். அதன்பின், மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார். இதனால், அப்பகுதி பரபரப்பானது. பின் நடத்துனர், பேருந்தை அங்கேயே நிறுத்தி போராட்டம் நடத்த துவங்கினார்.பின்னால் வந்த அரசு மாநகர பேருந்துகளும் அடுத்தடுத்து தங்களது பேருந்துகளை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடத்துனர், ஓட்டுனர்கள் என, பலரும் ஒரே இடத்தில் கூடினர்.தகவலறிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகியோரிடம் பேச்சு நடத்தினர்.தாக்குதலுக்கு ஆளான நடத்துனரை புகார் அளிக்க போலீசார் வலியுறுத்தினர். மற்ற பேருந்துகளை இயக்க போலீசார் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மற்ற பேருந்துகள் புறப்பட்டு சென்றன. பாதிக்கப்பட்ட நடத்துனர் நாராயணசாமி, பேருந்துடன் சென்று ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த பேருந்தில் வந்த பயணியர், மாற்று பேருந்தில் ஏறி சுங்குவார்சத்திரம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனையில் நாராயணசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.