தேசிய சப் - ஜூனியர் நெட்பால் பெண்களில் தமிழகம் சாம்பியன்
சென்னை, தேசிய சப் - ஜூனியர் நெட்பால் போட்டியில், பெண்கள் பிரிவில், தமிழக அணி முதலிடத்தை பிடித்து, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., ரெசிடென்ஷியல் பள்ளியில், 30வது தேசிய அளவிலான சப் - ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. சப் - ஜூனியர் பிரிவான, 16 வயதிற்கு உட்பட்ட இருபாலரிலும், 28 மாநிலங்களை சேர்ந்த, 54 அணிகளில், 800 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.போட்டியை, தமிழ்நாடு அமெச்சுர் நெட்பால் சங்கம் மற்றும் இந்திய நெட்பால் சம்மேளனம் இணைந்து நடத்துகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த அரையிறுதியில், அசாம் அணி, 17 - 14 என்ற கணக்கில் ஹரியானாவையும்; மற்றொரு போட்டியில், தமிழகம், 27 - 25 என்ற கணக்கில் கேரளாவையும் வீழ்த்தின. நேற்று காலை நடந்த இறுதிப் போட்டியில், தமிழகம், அசாம் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான போட்டியில், 17 - 14 என்ற கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தை பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்றோருக்கு, ஆர்.எம்.கே., கல்வி குழும தலைவர் முனிரத்தினம், இந்திய நெட்பால் கூட்டமைப்பின் சுமன் கவுசிக் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.