உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 30,000 இலவச பட்டா வழங்க இலக்கு? செங்கல்பட்டு அதிகாரிகளுக்கு நெருக்கடி!

30,000 இலவச பட்டா வழங்க இலக்கு? செங்கல்பட்டு அதிகாரிகளுக்கு நெருக்கடி!

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்., 12ல் ஆய்வு செய்யும் முதல்வர், பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் 30,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறை பணியாளர்கள், பல்வேறு நெருக்கடிக்கு ஆளாவதாக புலம்புகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.வாய்மொழி உத்தரவுஇப்பகுதிகளில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசிக்கின்றனர்.இவர்கள், கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர குறைதீர் கூட்டம், மனுநீதிநாள் முகாம்களில் பங்கேற்று, இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி மனு அளித்து வருகின்றனர்.இம்மனுக்கள் மீது விசாரணை செய்து, கள ஆய்வு நடத்தி, வருவாய் துறையினர் பட்டா வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பிப்., 12ம் தேதி, கள ஆய்வு செய்ய வருகிறார். அப்போது, மாவட்டத்தின் எட்டு தாலுகாக்களில் 30,000க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த நாட்களுக்குள், பெல்ட் ஏரியா, ஆட்சேபனைக்குரிய இடம் ஆகியவற்றை அடையாளம் கண்டு, அவற்றை வருவாய் ஆவணங்களில் மாற்றுவதால், பணிச்சுமையுடன், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, அத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.வருவாய் துறையினர் கூறியதாவது:சென்னையிலிருந்து 32 கி.மீ., துாரத்திற்கு 'பெல்ட்' ஏரியாவாக, பட்டா வழங்க தடை செய்யப்பட்ட பகுதியாக, 1962ம் ஆண்டு, அரசு உத்தரவிட்டது.இந்த பெல்ட் ஏரியாவில், செங்கல்பட்டு தாலுகாவில், காட்டாங்கொளத்துார், கண்டிகை, தைலாவரம், வல்லாஞ்சேரி, பொத்தேரி, காயரம்பேடு உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன.ஆவணங்கள்திருப்போரூர் தாலுகாவில் திருப்போரூர், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம் உட்பட 29 கிராமங்கள்; வண்டலுார் தாலுகாவில், மண்ணிவாக்கம், வண்டலுார், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், மாம்பாக்கம் உட்பட 36 கிராமங்கள் அடக்கம்.தாம்பரம் தாலுகாவில் பெருங்களத்துார், முடிச்சூர், மேடவாக்கம் உட்பட 20 கிராமங்கள்; பல்லாவரம் தாலுகாவில் ஜமீன் பல்லாவரம், திரிசூலம், கவுல்பஜார் உள்ளிட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.இப்படியாக, ஒவ்வொரு தாலுகாக்களிலும் ஏராளமான பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்குகளில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, பட்டா வழங்க முடியாத சூழல் இருந்தது.தற்போது, பெல்ட் ஏரியா என்ற பகுதியின் தடையை நீக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை கவனிக்கும்படியும், உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதாவது, 40 ஆண்டுகளாக ஒருவர், அதே பகுதியில் தான் வசிக்கிறாரா என்பதற்கான ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்.தவிர, மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்குவதாக இருந்தால், வழங்கப்படும் இடத்தின் அளவுக்கு ஏற்ப, மாவட்டத்தின் வேறு பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, வருவாய் ஆவணங்களில் சேர்க்க வேண்டும்.இப்படியாக, வருவாய் ஆவணங்களை தயாரிப்பதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இதனால், பணிச்சுமை ஏற்படுகிறது. வழக்கமான பணிகளையும் கவனிக்க முடிவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்டத்தில், முதல்வர் ஆய்வுக்கு வரும்போது, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அனைத்து துறைகள் வாயிலாக, பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு, இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.- ச.அருண்ராஜ்,கலெக்டர், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ