உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மாடுகள் மேயும் இடமாக மாறிய செவிலிமேடு நுாற்றாண்டு பூங்கா

 மாடுகள் மேயும் இடமாக மாறிய செவிலிமேடு நுாற்றாண்டு பூங்கா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு சம்மந்தமூர்த்தி நகரில், மாடுகள் மேய்ச்சல் இடமாக மாறியுள்ள நுாற்றாண்டு பூங்காவை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 43வது வார்டு, செவிலி மேடு சம்மந்தமூர்த்தி நகரில், 2021-22ம் ஆண்டு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட நுாற்றாண்டு பூங்கா இரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. இப்பூங்காவில், நடைபயிற்சி மேற்கொள்ள சிமென்ட் கல் பதித்த நடைபாதை, ஓய்வு எடுக்க மண்டபம், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், வண்ணமயமான மலர் செடிகள், பச்சைபசேல் புல்தரை, இருக்கை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் பட்டன. சம்மந்தமூர்த்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியினர் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், சிமென்ட் கல் நடைபாதை, சிறுவர் களுக்கான விளையாடும் பகுதியிலும் தேவையற்ற களைசெடிகள் முளைத்து உள்ளன. அழகுக்காக நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால் கருகி உள்ளன. பூங்காவிற்குள் உள்ள புல்வெளி மற்றும் அழகிய செடிகள் உள்ள பகுதிகள், மாடுகளின் மேயும் இடமாக மாறியுள்ளன. லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வருகிறது. எனவே, செவிலிமேடு சம்மந்தமூர்த்தி நகரில் உள்ள பூங்காவை சீரமைத்து, முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை