உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புத்த விஹார் அமைக்கும் பணி இழுபறி இடம் தேர்வு செய்யாத சுற்றுலா துறை

புத்த விஹார் அமைக்கும் பணி இழுபறி இடம் தேர்வு செய்யாத சுற்றுலா துறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், புத்த விஹார் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்யும் பணிகளை முடிக்காமல், சுற்றுலா துறை இழுத்தடித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்த விஹார் அமைக்க வேண்டும் என, பெளத்த மதத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும், சிறுபான்மையினருக்கான கருத்து கேட்பு கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், சுற்றுலா துறையிடமும் இதுபற்றிய கோரிக்கைகள் சென்றன. இதனால், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், காஞ்சிபுரம் அருகே புத்த விஹார் அமைக்கப்படும் என, சுற்றுலா துறை அறிவிப்பு வெளியிட்டது. அதையடுத்து, காஞ்சிபுரம் அருகே, புத்த விஹார் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. காஞ்சிபுரம் அருகே உள்ள கோட்டைக்காவல், சதாவரம், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் ஒன்றில் புத்த விஹார் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடங்களை ஆய்வு செய்ய சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் மாதம் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அவர் அப்போது வரவில்லை. அதைத் தொடர்ந்து, இடம் தேர்வு செய்யும் பணிகள் இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியாக உள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலி கூறியதாவது: புத்த விஹார் அமையும் இடம் மக்கள் எளிதாக சென்று வரும் இடமாக இருக்க வேண்டும். சில இடங்களை தேர்வு செய்து, சுற்றுலா துறையிடம் தெரிவித்துள்ளோம். எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என, அவர்கள் முடிவு செய்தால் அந்த இடத்தை சுற்றுலா துறைக்கு மாற்றி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை