ஒரு மாதமாக வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ஏனாத்துார்வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துாரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்க, காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலையோரம் நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக வழிந்தோடி, சாலையோரம் குட்டைபோல தேங்கியுள்ளது. இந்த நீரில், டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மேலும், தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைந்துள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதில், ஏனாத்துார் ஊராட்சி அலட்சியமாக இருப்பதால், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.