மின் விளக்கு வசதியில்லாததால் இருளில் செல்லும் வளத்துார் மக்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராம கூட்டு சாலையில் இருந்து, வளத்துார் கிராமத்தின் வழியாக, புரிசை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், பத்திற்கும் மேற்பட்ட அபாயகரமான வளைவுகள் உள்ளன.இந்த சாலை ஓரம், அரசு கேபிள் தாங்கி செல்லும் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், போதிய மின் விளக்கு வசதிகள் அறவே இல்லை. இதனால், அவ்வழியே செல்லும் மக்கள் இருளில் செல்ல வேண்டி உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து மாலை மற்றும் இரவில் வளத்துார் செல்வோர், பரந்துார் கூட்டு சாலையில் இறங்கி 2 கி.மீ., துாரம் நடந்து, சைக்களில் செல்ல வேண்டும். இரவில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.