மின்மாற்றி பழுதால் தவிப்பு நெற்பயிர் பாதிக்கும் அபாயம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் துணை மின்நிலைய எல்லைக்கு உட்பட்ட மருத்துவன்பாடி, ஆனைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விளைநிலங்களுக்கு மின்சாரம் வழங்க, இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.இதில், மருத்துவன்பாடி பெட்டி பிள்ளையார் குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி வாயிலாக, 200 ஏக்கர் பயிர்களுக்கு, மின்மோட்டார் வாயிலாக நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, மின்மாற்றி பழுதடைந்து, மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதி விளைநிலங்களுக்கு மின்மோட்டார் வாயிலாக நீர்பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மருத்துவன்பாடி பெட்டி பிள்ளையார் கோவில் அருகே உள்ள மின்மாற்றி, ஒரு வாரத்திற்கு முன் பழுதடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன், உத்திரமேரூர் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால், தற்போது வரை மின்மாற்றி சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், நெற்பயிருக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து மின்மாற்றியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.