| ADDED : பிப் 08, 2024 12:09 AM
சென்னை:சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளே சில நாட்களுக்கு முன், இரண்டு வாலிபர்கள் குத்தாட்டம் போட்டு, அதற்கு சினிமா பாடலை இணைத்து, 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தனர்.கோவில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை உள்ள நிலையில், இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கோவிலுக்குள் அத்துமீறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையும் வலுத்தது.இது குறித்து, கோவில் நிர்வாகத்தால் மயிலாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையறிந்த சம்பந்தப்பட்ட நபர்கள், 'நாங்கள் செய்தது தவறு தான். இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டோம்' என, திடீரென வீடியோ பதிவிட்டு மன்னிப்பு கேட்டனர்.இந்த சர்ச்சை அடங்குவதற்குள், கபாலீஸ்வரர் கோவில் வாசல் முன் பெட்ரோல் போன்ற எரிபொருளை ஊற்றி, அதற்கு தீ வைத்த சம்பவம், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கபாலீஸ்வரர் கோவில் வாசல் முன், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. கோவில் நிர்வாகம் மற்றும் பகுதிமக்கள் இணைந்து தீயை அணைத்தனர்.துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டதால், கோவில் வாசல் கதவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவில் வாசலில் போதை ஆசாமி தீ வைப்பது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவில் வாசலில் இருந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து உள்ளதால், ஆசாமிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.'தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் கபாலீஸ்வரர் கோவில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, கோவில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.