வேலை நிறுத்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
காஞ்சிபுரம்:மத்திய அரசை எதிர்த்து, 13 தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால், காஞ்சிபுரத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. அரசு பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசை எதிர்த்து நேற்று, 13 தொழிற்சங்கத்தினர், பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், காஞ்சிபுரத்தில் வழக்கம்போல அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருந்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று பணிமனைகளிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 460 பேருந்துகளும் இயக்கப்பட்டதன் மூலம், 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
225 மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பு
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், 1,200க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் உள்ளனர். இதில், 225 மின் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, கோவிந்தவாடி மின் வாரிய அலுவலகத்தில் கம்பியாளர்கள், மின் பாதை ஆய்வாளர்கள், ஆக்கமுகவர்கள் என, பல தரப்பினர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று முன் தினம் இரவு பெய்த மழைக்கு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு கொடுக்க, மின் வாரிய அதிகாரிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.இருப்பினும், மின் ஒப்பந்த தொழிலாளர்களை களத்தில் இறக்கி, மின் வாரிய உயரதிகாரிகள் மின் சப்ளையை சீர்படுத்தி வினியோகம் செய்தனர். மேலும், கிராமங்களில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு இருந்தது.