காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி மாட்டுத்தொழுவமாக மாறிய அவலம்
வளத்துார்:காஞ்சிபுரம் அடுத்த, வளத்துார் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சிறு மின் விசை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.வளத்துார், சிவன் கோவில் குளம் அருகே, ஒன்றிய பொது நிதியை பயன்படுத்தி ஆழ்துளை கிணற்றுடன் கூடிய, சிறு மின் விசை நீர்த்தேக்க தொட்டி கட்டிக்கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தன.இந்த நீர்த்தேக்க தொட்டி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், காட்சிப்பொருளாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அப்பகுதியினர், ஆடு, மாடுகள் கட்டும் தொழுவமாக மாற்றியுள்ளனர்.கோடைக்காலங்களில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீர் வினியோகம் குறையும் போது, மாற்று ஏற்பாடாக சிறு மின் விசை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சிறு மின் விசை நீர்த்தேக்க தொட்டியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.