குடிநீர் அடிகுழாயை ஆக்கிரமித்து வீடு கிராமத்தினருடன் ஊ.தலைவர் தர்ணா
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, வேலைவாய்ப்பு, பட்டா, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, 429 பேர் மனு அளித்திருந்தனர்.மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.காஞ்சிபுரம் தாலுகா, காரை போஸ்ட், செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், கலெக்டர் வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 82 பேருக்கு, வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. அதில், 54 பேருக்கு பட்டா வழங்காமல் விடுபட்டுள்ளது.எனவே, விடுபட்ட நபர்களுக்கு பட்டா வழங்க, 8 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இது தொடர்பாக, தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கலெக்டர் வளாகத்தில் திடீரென பலரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் சமாதானம் செய்த பின், குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து, தங்கள் பிரச்னையை தெரிவித்தனர். அதேபோல், நத்தாநல்லுார் கிராமத்தில் கைப்பம்பு ஆக்கிரமித்த நபர் மீது நடவடிக்கை கோரி, ஊராட்சி தலைவர் மணி மற்றும் கிராமவாசிகள் போராட்டம் நடத்தினர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லுார் கிராமத்தில், பழங்குடியின மக்கள் பயன்பாட்டில் குடிநீர் கைப்பம்பு இருந்தது. இவற்றை சுற்றி வீடு கட்டி, தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாக, நாங்கள் ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீரின்றி பழங்குடியினர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.