537 அரசு பள்ளி மாணவ- - மாணவியருக்கு சீருடை அனுப்பும் பணி துவக்கம்
காஞ்சிபுரம்:தமிழக அரசு சார்பில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆண்டுதோறும் இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என, மொத்தம் 537 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு இலவச சீருடை வழங்கப்பட உள்ளது.இதையொட்டி, காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலகம் சார்பில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு நடுநிலைப்பள்ளியில் இருந்து, காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி என, மொத்தம் 107 பள்ளியைச் சேர்ந்த மாணவ - மாணவியர் ஒவ்வொருவருக்கும், முதற்கட்டமாக இரண்டு செட் சீருடை அனுப்பும் பணி நேற்று துவங்கியது.இதேபோல, மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், குன்றத்துார் வட்டாரத்தில் உள்ள 430 அரசு பள்ளிகளுக்கும் சீருடை வழங்கும் பணி நேற்று துவங்கியது.