மலைபோல் தேங்கும் குப்பை படப்பையில் தீராத பிரச்னை
குன்றத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் படப்பை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.நாளொன்றுக்கு 4,000 கிலோ குப்பை சேகரமாவதால் படப்பை ஊராட்சியில் குப்பை அகற்றுவது பிரச்னையாக இருந்து வந்தது.இந்நிலையில், ஒரகடத்தில் உள்ள ரெனால்டு நிசான் கார் தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, 61 லட்சம் ரூபாய் மதிப்பில், காந்த சக்தி வாயிலாக நாளொன்றுக்கு 5,000 கிலோ குப்பையை அழிக்கும் திறன் கொண்ட, காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம், படப்பையில் 2022ல் அமைக்கப்பட்டது.மேலும், அரசு நிதியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் அரவை கூடமும், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் இயற்கை உரம் தயாரிக்கும் நுண்ணுயிரி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.இதனால், படப்பையில் குப்பை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இவை எதுவும் முறையாக இயங்காமல் மூடியே கிடக்கின்றன. இதனால், படப்பை ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம் அருகே மலைபோல் கொட்டப்பட்டுள்ளன.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:படப்பை ஊராட்சியில் மட்டும் குப்பையை அழிக்க 1.22 கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், குப்பை பிரச்னைக்கு இதுவரை தீர்வு இல்லை. இதனால் 1.22 கோடி நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து வீசும் துர்நாற்றத்தால், அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர். குப்பை அழிக்க அமைக்கப்பட்ட இயந்திரங்களை முறையாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.