மின் மோட்டார் பழுது ஓரிக்கையில் கழிப்பறை வீண்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை, பழைய காலனியில், மின் மோட்டார் பழுதால், தண்ணீர் வசதியின்றி, பொது கழிப்பறை பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை பழைய காலனியில், 10 ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டு இருந்த மின் மோட்டார் பழுதடைந்து இருந்தது. பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபை அறிவிப்பு திட்டத்தின்கீழ், 2023ம் ஆண்டு, ஜூலை மாதம், பொது கழிப்பறை சீரமைக்கப்பட்டது. பகுதி மக்கள் வழக்கம்போல, பொது கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். சீரமைத்த ஒரு சில மாதத்திலேயே ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் மீண்டும் பழுதானதால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளதால் கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்கவும், கழிப்பறை கட்டடத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓரிக்கை, பழைய காலனியினர் வலியுறுத்தி வருகின்றனர்.