தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், கனிமங்களை ஏற்றி செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், விபத்து ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்ட மாகரல், ஆற்பாக்கம், பழவேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குவாரி, கிரஷர்களில் இருந்து அன்றாடம் ஏராளமான லாரிகளில் கனிமங்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இந்த லாரிகள், பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதால், விபத்து அபாயம் தொடர்கிறது. விதிமுறையை மீறி, அதிக எடை ஏற்றுவதோடு, லாரிகளுக்கு தார்ப்பாய் போட்டு மூடாமலும் செல்கின்றன. தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களில் உள்ள கனிமங்கள் சாலையில் விழுவதோடு, பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழும் அபாயம் உள்ளது. இதனால், விபத்து ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபாத் நகர பகுதிகள் வழியாக செல்லும் கனரக வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தாசில்தார் என இரு துறையினரும், கண்காணித்து விதிமீறல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.